ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபர்!!

97

அரியானாவில் ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை போட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பெண் யூடியூபர் ரவீனா (32), அவரது கணவர் பிரவீன் ஆகியோர் வசித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரவீனா வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்ற நபருடன் ரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து குறும்படங்களை எடுத்தனர்.

அரியானாவின் பிரேம்நகரில் அவர்கள் எடுத்த வீடியோக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தன. ஒரு வருடமும் மூன்று மாதங்களாக இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டனர்.

ஆனால், ரவீனாவின் கணவர் பிரவீனுக்கு இவர்களின் செயல்பிடிக்கவில்லை. மேலும் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். குடும்பத்தினரும் ரவீனாவின் செயலை கண்டித்தனர்.

இருந்தும் ரவீனாவும், சுரேஷூம் வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை நிறுத்தவில்லை. குறும்படங்கள் மற்றும் டான்ஸ் ரீல்ஸ்களால் ரவீனாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 34,000 பின்தொடர்பவர்கள் இருந்தனர்.


அவரது யூடியூப் வீடியோ தொடரில் மற்ற நடிகர்களும் இடம்பெற்றனர். வீடியோக்கள் உருவாக்குவதையே முழு நேரப் பணியாகக் கொண்ட ரவீனா, ஒரு கட்டத்தில் தனது கணவருடன் சண்டையிட்டார்.

கடந்த மார்ச் 25 அன்று, ரவீனா தனது இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன் சுரேஷுடன் உல்லாசமாக இருப்பதை பிரவீன் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. ஆத்திரத்தில், ரவீனாவும் சுரேஷும் சேர்ந்து துப்பட்டாவால் பிரவீனைக் கழுத்து நெரித்துக் கொலை செய்தனர்.

பின்னர் அதிகாலை 2:30 மணியளவில், இறந்துபோன பிரவீனின் உடலை பைக்கில் எடுத்துச் சென்று, தின்னோட் சாலையில் உள்ள கால்வாயில் வீசி எறிந்தனர். ரவீனாவின் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அந்த வடிகால் உள்ளது.

இந்நிலையில் பிரவீனின் உடலை சதர் காவல் நிலைய போலீசார் கண்டறிந்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் ரவீனாவையும், அவரது கள்ளக்காதலன் சுரேஷையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.