லண்டனுக்கு மாறும் டிக்டாக் தலைமையகம்..? சீன தொடர்பை முறித்துக் கொள்ள ஆயத்தம்..!

967

தன்னுடைய சீன வேர்களிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில், பைட் டேன்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் இப்போது அதன் தலைமையகத்தை பிரிட்டன் தலைநகரான லண்டனுக்கு மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

டிக்டாக் பரிசீலிக்கும் ஒரே இடம் லண்டன் அல்ல என்பதையும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேசி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டிக்டாக் ஏற்கனவே அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவால் தடைசெய்யப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த மாற்றம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அமெரிக்காவும் டிக்டாக்கின் நடவடிக்கைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.


மேலும் சீன அரசாங்கத்துடனான அதன் நிழல் தொடர்புகள் காரணமாக அதன் மீது தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

அமெரிக்காவில் தனது நிலையை வலுப்படுத்த, முன்னாள் வால்ட் டிஸ்னியின் இணை நிர்வாகி கெவின் மேயரை தலைமை நிர்வாகியாக டிக்டாக் பணியமர்த்தியுள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில் லண்டன் மற்றும் சீனாவிற்கு வெளியே உள்ள பிற முக்கிய இடங்களில் தனது பணியாளர் தளத்தை விரிவுபடுத்தவும் டிக்டாக் எதிர்பார்க்கிறது.