தென்காசி மாவட்டம் இரட்டை குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு மானஷா (வயது14) என்ற மகள் உள்ளார்.
சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கு சைக்களில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, காலை மாணவிமானஷா வழக்கம் போல் வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வகுப்பறையில் தனது நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக நிலை தடுமாறி கீழ் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்த விவரத்தைக் கூறியுள்ளனர்.
உடனடியாக பதறிப்போய் ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவி மானஷாவை தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து மயக்கநிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவி மானஷாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்காக ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
அப்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மாணவி மானஷா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிறகு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.