வயதான தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன் : பிளாஸ்டிக் கவரை உண்ட அவலம்!!

12

தனது வயதான தாயாரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் கும்பமேளாவிற்கு மகன் சென்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் ஜனவரி 13ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது.

மகா சிவராத்திரி நாளான வருகிற 2ஆம் திகதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியிலும், தேசிய மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.