கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது. கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பொது சுகாதார பரிசோதர்களுக்கு,
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக மத்திய வங்கியின் நிதி உதவியில் சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 12 சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அப்பாச்சி ரக மோட்டர் சைக்கிள்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், தொற்று நோயியல் வைத்திய நிபுணர் எஸ்.லவன், ஆகியோரினால் இவ் மோட்டார் சைக்கிள்கள் சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.