இங்கிலாந்து நாட்டில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவு நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இங்கிலாந்தின் சவுத்போர்ட்டைச் சேர்ந்த மாணவி செமினா ஹாலிவெல், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜூன் 2021ல் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகமாக உட்கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செமினா ஹாலிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் இப்போது முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில், “இனி நான் உயிருடன் இருக்க விரும்பாததை விட மோசமானது எதுவுமில்லை. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாத ஒரே காரணம், நீங்கள் விரும்பும் நபர்களை காயப்படுத்த விரும்பாததால் தான்” என்று கூறியிருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து அவர், “நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க முடியும். ஆனால் நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். நான் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையை முழுவதுமாக இழந்து விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 9ம் தேதி நள்ளிரவில் செமினா ஹாலிவெல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதைப் பதிவிட்டதை துப்பறியும் தலைமை ஆய்வாளர் கிறிஸ் மஹர் உறுதிப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல் தற்கொலை முயற்சிக்குப் பிறகு அவர் பதிவு செய்த புகைப்படமும் அவரது தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்காக, தனது சகோதரருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த அதே மருந்துகளை செமினா ஹாலிவெல் எடுத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் ஜூன் 12ம் தேதி உறுப்பு செயலிழப்பு காரணமாக இறந்தார்.
செமினா ஹாலிவெல் இறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஜனவரி மாதம் ஒரு சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு செமினா ஹாலிவெல் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் மாணவியின் நிர்வாண புகைப்படம் அவரது பள்ளி மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட்டதும் மாணவியைத் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது.