கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சக மாணவிகளின் மனரீதியான துன்புறுத்தலே மாணவி அம்முவின் மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி அம்முவின் தந்தை, அவளது வகுப்புத் தோழிகள் மூன்று பேர் தொடர்ந்து தனது மகளைத் தொந்தரவு செய்ததாகவும், சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகும், அவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அம்மு கூறியதாக தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அம்மு சஜீவ் எனும் மாணவி, விடுதி கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டார். அம்மு சுட்டிப்பாரா எஸ்எம்இ நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
‘அம்முவை அவளுடைய தோழிகள் மனதளவில் துன்புறுத்தினார்கள். அம்மு ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவப் பயிற்சிக்காகச் சென்ற போது அம்முவுக்கும் அவளது வகுப்புத் தோழிகள் மூவருக்கும் இடையே சில சிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர் அவள் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரால் துன்புறுத்தப்பட்டாள். தொல்லை தாங்க முடியாமல் விடுதியில் உள்ள வேறு அறைக்கு மாறினாள்.
காணாமல் போன புத்தகத்திற்காக அவளது பையை அங்கீகரிக்காமல் தேடியதும் அம்முவை மேலும் மனதளவில் காயப்படுத்தியுள்ளது.
இது குறித்த பிரச்னைகள் தொடர்ந்தபோது கல்லூரி கல்லூரியின் முதல்வரிடம் அம்மு புகார் அளித்தார். தன் வகுப்பு ஆசிரியர் அவளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தது அம்முவுக்குத் தெரியாது.
அவர் சுற்றுப்பயணத்திற்கு வரவில்லை என தெரிவித்திருந்தும் அந்த கும்பல் அவளை மிரட்டத் தொடங்கியிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது’ என அம்முவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த பத்தனம்திட்டா போலீசார், அவரது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டுள்ளன.