விளையாட்டால் விபரீதம்.. பட்டாசு பெட்டியின் மீது அமர்ந்து உயிரை விட்ட இளைஞர்!!

170

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் 32 வயது சபரீஷ். இவர், தனது நண்பர்களுடன் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் கொண்டாடி உள்ளார்.

அப்போது சக்தி வாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். வேலைக்கு செல்ல தேவையில்லை.

இலவசமாகவே ஆட்டோ ரிக்சா கிடைத்தால் அதை வைத்து பிழைப்பை ஓட்டி விடலாம் என மனக்கணக்கு போட்டார் சபரீஷ். இதனால் நண்பர்களின் சவாலை ஏற்றார். இதன் பேரில் பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார்.

அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பயங்கரமான சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது.

இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.