வீட்டை காலி செய்வதாக கூறியதால் தாக்கிய வீட்டின் உரிமையாளர்… பெண்ணின் கரு கலைந்த சோகம்!!

297

வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் மாதம் 9 ஆயிரம் வாடகைக்கு, விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதி குடியிருந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கவிதாவர்ஷினி கருவுற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

2வது மாடி வரை படி ஏறக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாடிப்படிகள் ஏறக்கூடாது என்பதால் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளர் சுரேஷிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.

அதற்கு மூன்று மாதம் வாடகையை பிடித்து கொள்வதுடன் சுண்ணாம்பு அடிக்க ரூ.8,000 போக, நீங்கள் தான் ரூ.4000 தர வேண்டும் என்று சுரேஷ் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், முன் பணமாக 40 ஆயிரம் ஆயிரம் கொடுத்துள்ளேன். எதற்காக 3 மாதம் வாடகை பிடித்தம் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.


அட்வான்ஸ் பணம் தரமுடியாது, மீதம் 4 ஆயிரம் தந்துவிட்டு வீட்டை காலிசெய்யும்படி சுரேஷ் மிரட்டியுள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விக்னேஷை தாக்கும்போது குறுக்கே வந்த அவரது மனைவி கவிதாவர்ஷினியை கர்ப்பிணி என்று பாராமல் தள்ளிவிட்டார். இதனால், அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது கவிதா விழுந்ததில், வயிற்றில் அடிபட்டு வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதனை பார்த்து பதறிபோன விக்னேஷ் உடனே மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் கருக்கலைந்து விட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் வெங்கடேசன் இருவரும் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட தம்பதியை வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் வீட்டு உரிமையாளர் கொடுக்கும் புகாரில் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீஸார் வீட்டு உரிமையாளர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.