கொலை வழக்கில் ஏமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான நிமிஷா பிரியா.
ஏமன் நாட்டில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் டோம் தோமஸ் என்பவரும் ஏமனில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஏமனில் ஒரு கிளினிக் துவங்க அதே நாட்டை சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவருடன் நிமிஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் சட்டப்படி, கிளினிக் உரிமம் பெறுவதற்காக, நிமிஷா – தலால் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் சான்றிதழ் சமர்ப்பித்தனர். கிளினிக் நன்றாக இயங்கிய நிலையில் தலால், தன் காதலை தெரிவித்தபோது, நிமிஷா மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தலால், நிமிஷாவை துன்புறுத்தி வந்தார். தலாலின் மீது பொலிசாரிடம் புகார் அளித்தார் நிமிஷா. இந்த வழக்கில் சிறை சென்று திரும்பிய தலால், தினமும் நிமிஷாவை சித்ரவதை செய்யத் துவங்கினார்.
தனக்கும், நண்பர்களுக்கும் பணிய வேண்டும் என மிரட்டினார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நிமிஷா, கடந்த 2017ம் ஆண்டு தலாலுக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கிய அவரை நிமிஷா கொலை செய்தார்.
மேலும், கிளினிக்கில் வேலை செய்த, ஹனான் என்பவர் உதவியுடன் தலாலின் உடலை 110 துண்டுகளாக்கி சாக்கு பையில் கட்டி வீட்டின் தண்ணீர் டேங்கில் மறைத்து வைத்தார். நான்கு நாட்களுக்கு பின் துர்நாற்றம் வீசியதால், உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
நிமிஷா, ஹனான் இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு நிமிஷாவுக்கு துாக்கு தண்டனையும், ஹனானுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஏமன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மட்டுமின்றி 2010 ஆகஸ்ட் 18ல் அந்நாட்டு உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து நிமிஷா சீராய்வு மனு தாக்கல் செய்ய ஏமன் நீதிமன்ற கவுன்சில் 15 நாள் அவகாசம் அளித்தது. அதே நேரத்தில் 70 லட்சம் ரூபாய் இழப்பீடு தந்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என தலால் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனிடையே, சீராய்வு மனுவின் மீது முடிவு எடுக்கும் வரை துாக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.