வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

286

சென்னை…

சென்னை பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், படகுமூலம் வீடு தோறும் சென்று உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த வேலூரை சேர்ந்த போலீசாரிடம் ( வேலூரை சேர்ந்த மாநில பேரிடர் மீட்புக் குழு) ஒரு நபர் மொட்டை மாடியில் நின்று எமர்ஜென்சி எமர்ஜென்சி என கத்தி கூச்சலிட்டுள்ளார்.

உடனடியாக அந்த வீட்டின் அருகே விரைந்த மீட்பு குழுவினரிடம் அந்த நபர்,”மனைவி கர்ப்பமாக உள்ளார் . மின்சாரம் இல்லை; சாப்பிட உணவு இல்லை. இரண்டு நாட்களாக வயிற்று வலியால் மனைவி துடித்துக் கொண்டிருக்கிறாள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்,”என்று கதறி அழுதுள்ளார்.

பின்னர் காலம் தாமதிக்காமல் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருந்த வீட்டின் தரைதளத்திலிருந்து மேலே சென்ற போலீசார், மாடியில் வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை கைத்தாங்கலாக கீழே தூக்கிச் சென்று, படகுமூலம் சுமார் 800 மீட்டர் வெள்ள நீரில் பயணித்து பள்ளிக்கரணை மெயின் ரோட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


பின்னர்,அங்கிருந்து காரில் கர்ப்பிணி பெண்ணை அவரது கணவருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் மீட்பு குழுவினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.அவருக்கு நேற்று டிசம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிக்கு தக்க சமயத்தில் உதவிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு இளம் பெண்ணின் குடும்பத்தினர் தங்களது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டனர்.