உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.
மத்திய ரிசர்வ் பொலிசில் பணியாற்றிவந்த தீபக், காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் அமைதியான ஒரு வாழ்வைத் துவங்கலாம் என முடிவு செய்து பொலிஸ் வேலையை விட்டுவிட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், சென்ற மாதம் 4ஆம் திகதி தீபக்கின் சகோதரரான பியுஷை மொபைலில் அழைத்த ஷிவானி, தீபக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பியுஷ் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய, தன் சகோதரர் மருத்துவமனைக்கு வரும்போதே அவரது உடலில் உயிர் இல்லை என மருத்துவர்கள் கூறியதுடன், தன் கணவருக்கு உடற்கூறு ஆய்வு செய்யவேண்டாம் என ஷிவானி கூறியதாலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி உடற்கூறு ஆய்வு வெளியாக, பியுஷின் சந்தேகம் உறுதியாகியுள்ளது.
ஆம், தீபக் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை, அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
ஷிவானி தனது கணவரின் ரயில்வே வேலை தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன், ஷிவானி இந்தக் கொலையை தனியாக செய்யவில்லை, அவருக்கு வேறு யாரோ உதவியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.