10 வயதை குறைத்து நாடகம்… இளைஞரை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற போலி எஸ்.ஐ கைத!!

137

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து கொண்டு, பைக்கில் வலம் வந்துள்ளார். அவரின் செயலில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது.

அதன்பேரில் அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்ததும், அந்த பெண் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டதை போலீசார் உறுதிசெய்தனர்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் உலா வந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் பெயர் அபி பிரபா எனவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 34 வயதாகும் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியுள்ளது.

அண்மையில், ரயில் பயணத்தின் போது நாகர்கோவில் அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு, காதலாக மலர்ந்துள்ளது.

அப்போது, 10 வயதை குறைத்து தனக்கு 24 வயது தான் ஆகிறது என்றும் அளந்து விட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளைஞரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.


ஆனால், அரசுப் பணியில் இருக்கும் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்று தனது பெற்றோர் வலியுறுத்துவதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதற்காக, அந்த இளைஞரை ஏமாற்றும் நோக்கில் அவர் போலீஸ் வேஷம் போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக, எஸ்.ஐ.-க்கான சீருடைகளை வாங்கி போட்டுக் கொண்டு ஊருக்குள் உலா வந்துள்ளார்.

பள்ளிவிளை பகுதியில் உள்ளவர்களிடம் தான் சென்னை குற்றப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும்,விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வர உள்ளதாகவும் புருடா விட்டுள்ளார். போட்ட வேஷத்தை கச்சிதமாக போடாததால், சீருடையே அவர் போலி போலீஸ் என்பதை காட்டிக் கொடுத்துள்ளது.

போலீஸ் யூனிஃபார்மில் வலது பக்கம் வைக்க வேண்டிய தனது பெயர் பட்டையை, இடது பக்கமாக குத்தியுள்ளார். இதேபோன்று ஸ்டார்களையும் இடம் மாற்றி குத்தியுள்ளார்.

இதன் மூலமே அபி பிரபா போலீஸ் பெயரில் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், எஸ்.ஐ. எனக் கூறி யாரிடமும் பணம் வசூல் செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் ஒருவரை இரண்டாவது திருணம் செய்வதற்காக வயதை மறைத்ததுடன், எஸ்.ஐ., என உதார் விட்டுத் திரிந்த பெண், அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.