தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை காலை சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
16 வயது மாணவி ஸ்ரீநிதி(Sri Nidhi) பள்ளி வாயிலுக்கு வெளியே மயங்கி விழுந்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாணவிக்கு பள்ளிக்குச் சற்று முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பின்னர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக செயல்பட்ட ஆசிரியர் ஒருவர் ஸ்ரீநிதியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையும், சிபிஆர் (Cardiopulmonary Resuscitation) எனப்படும் இதயப் பரிசோதனை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்துள்ளனர், இருப்பினும் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை.
மருத்துவர்கள் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதனால் மற்றொரு மருத்துவமனையில் ஸ்ரீநிதி கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ரீநிதி(Sri Nidhi), ராமாரெட்டி மண்டலத்தில் உள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்திலிருந்து வந்து காமரெட்டியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
ஸ்ரீநிதியின் இழப்பால் பள்ளி சமூகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியையும், துயரத்தையும் வெளிப்படுத்தினர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். ரப்பானி, கடந்த இரண்டு தசாப்தங்களில் திடீர் இதய இறப்புகளில் 22% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளை குழந்தைகள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.