11 கிலோ தங்க நகைகள் அணிந்து கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் சாமியார்கள்!!

26

மகா கும்பமேளாவில் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து 2 சாமியார்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில், பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி என்ற சாமியாரும் கலந்து கொண்டுள்ளார்.

இவர், ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம், தங்க பிரேஸ்லெட்கள் ஆகியவற்றை அணிந்து கொண்டு கும்பமேளாவில் வலம் வருகிறார். இந்த அணிகலன்களின் எடை 6.7 கிலோ ஆகும்.


அதேபோல, கோல்டன் பாபா’ (தங்க பாபா) என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.நாரயண் கிரி என்பவரும் அகாடாவில் முகாமிட்டுள்ளனர்.

இவர், கழுத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க அணிகலன்கள், 10 விரல்களிலும் தங்க மோதிரங்கள், செல்போனுக்கு தங்க உறை என மின்னுகிறார்.

இவரது அணிகலன்களின் மொத்த எடை 4 கிலோ ஆகும். இந்த 2 சாமியார்களும் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றனர்.

அதேபோல, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யானந்த் கிரி என்ற சாமியாரும், 5 கிலோ தங்க நகைகளை அணிந்து கும்பமேளாவுக்கு 23-ம் திகதி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.