செங்கல்பட்டு….
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
இந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இந்த காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்ததுடன் எல்லை மீறியும் நடந்து கொண்டுள்ளனர். இதனிடையே, சிறுமியின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ந்துபோன அவரது பெற்றோர் உடனடியாக கருக்கலைப்பு செய்திட வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் 17 வயது சிறுமி என்பதால் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 12 ம் வகுப்பு படிக்கும் காதலனான மாணவனை காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.