16 வருஷம் தலைமறைவு.. பீஸா செய்யும் வேலை பார்த்துவந்த மாஃபியா கும்பல் தலைவன் : சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!!

435

பிரான்ஸில்..

16 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த மாபியா கும்பலின் தலைவன் தற்போது காவல்துறையினரிடத்தில் சிக்கியுள்ளார். ஒரு வகையில் தன்னுடைய கைதுக்கு அந்த நபரே காரணமாகவும் அமைந்திருக்கிறார்.

இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் எட்ஹர்டொ கிரிகொ. தற்போது இவருக்கு 63 வயதாகிறது. பிரான்ஸ் நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் பெயரில் வழக்குகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மோதலின்போது இரண்டு பேரை எட்ஹர்டொ கிரிகொ கொலை செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. அப்போது இவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்றுள்ளனர்.


ஆனால், அங்கிருந்து தப்பிச் சென்ற கிரிகோ வேறு நாட்டுக்கு சென்றுவிட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து கிரிகோ பிரான்சில் இருந்த மாஃபியா கும்பலின் தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும், கிரிகோவை கண்டுபிடிக்கும் நோக்கில் இன்டெர்போலின் உதவியை நாடியது பிரான்ஸ். அதன்படி உலக நாடுகள் பலவற்றிலும் கிரிகோவை தேடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை.

அதே நேரத்தில் பிரான்சில் இருந்து தப்பிச்சென்ற கிரிகோ இத்தாலி நாட்டில் குடியேறியிருக்கிறார். அங்கிருந்த ஹோட்டல்களில் பீட்ஸா செய்யும் கலைஞராகவும் பணிபுரிந்து வந்திருக்கிறார் இவர்.

இத்தாலியில் தனது பெயர் பொலோ டிமிட்ரியோ என வைத்துக்கொண்டு புது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் இவர். நாட்கள் செல்ல செல்ல சமையல் கலைஞராக இருந்த கிரிகோ சொந்தமாக உணவகம் ஒன்றை வைக்க முடிவெடுத்திருக்கிறார்.

அங்குதான் அவருடைய சரிவுக்கு முதல் அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவரின் உதவியுடன் உணவகத்தை திறந்த கிரிகோ,கடையை பிரபலப்படுத்தும் விதமாக உள்ளூர் சேனலுக்கு இன்டர்வ்யூவ் கொடுத்திருக்கிறார்.

அதில் தான் பிரான்ஸை பூர்வீகமாக கொண்டவன் என சொல்லப்போக விஷயம் போலீசுக்கு தெரிந்திருக்கிறது. உடனடியாக பழைய கேஸை தூசிதட்டிய போலீஸ் அடுத்த சில நாட்களில் கிரிகோவை கைது செய்திருக்கிறது.

இன்டெர்போலின் உதவியுடன் இந்த கைது நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஃபியா கும்பலாக செயல்பட்டுவந்த கிரிகோ தனது வாயாலேயே சிக்கிக்கொண்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.