சேலம்…
சேலம் அருகே பப்ஜி விளையாடும்போது ஏற்பட்ட பழக்கத்தில் 17 வயது மாணவனுடன் 20 வயது பட்டதாரி பெண் வீட்டிலிருந்து வெளியேறி குடும்பம் நடத்தி வந்ததும், தற்போது அந்த பெண் மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன்கள் மூலம் நடைபெறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது சேலத்தில் அரங்கேறி இருக்கும் ஒரு சம்பவம் தான் போலீசாரையே தலை சுற்ற வைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பனிரண்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வேண்டும் என அந்த மாணவன் கேட்க பெற்றோரும் ஆசை ஆசையாக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கித் தந்திருக்கின்றனர். மாலை நேரங்களில் தொடங்கி நள்ளிரவு வரை பப்ஜி கேம் விளையாடுவதிலேயே நேரத்தை செலவிட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்.
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் அந்த சிறுவன் வீட்டிலிருந்து மாயமானார். இதனால் பதறிப்போன பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் பல இடங்களில் தேடினர். ஆனாலும் சிறுவன் குறித்த தகவல் கிடைக்கவில்லை இதை எடுத்து போலீசில் புகார் அளித்தும் பலன் இல்லாமல் போனது.
மாணவன் குறித்த தகவல் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தனர். இதை அடுத்து சிறுவனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுவன் கிருஷ்ணகிரி அருகே தங்கி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சிறுவனுடன் இளம்பெண் ஒருவரும் தங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பப்ஜி விளையாடிய போது சிறுவனுக்கும் 20 வயதான பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்த நிலையில் அந்த சிறுவனை இளம்பெண் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
வயது வித்தியாசம் காரணமாக தங்களை ஒன்று சேர பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டதும் கிருஷ்ணகிரியில் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போன போலீசார் இருவரையும் சேலம் அழைத்து வந்தனர். சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பெற்றோருடன் அனுப்பவும், இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.