2 நாட்கள் துப்பாக்கி சத்தம்… வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய தமிழக மாணவிகள் கூறிய விடயம்!!

171

கலவரத்தை வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொண்டோம்! வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் வங்காளதேசத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் மீட்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் நேற்று ஊர் திரும்பினர்.

மகளிர் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் ப்ரீதா, ஸ்ரீநிதி, தக்சன்யா என்ற தமிழக மாணவிகள் கலவரம் குறித்து பேசியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ”எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 17ஆம் திகதி வங்காளதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விவரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவதற்குள் அங்கு இணையதளம் முடங்கியது.


மொபைல் உட்பட அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. உணவு கூட வழங்கப்படாமல், உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்துகொண்டோம்.

எங்கள் பெற்றோரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்து மாணவி தக்சன்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது.

அந்த மொபைல் மூலம் 60 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர். அச்சத்துடன் இருந்த எங்களை விடுதி, கல்லூரி நிர்வாகிகள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ செல்லுங்கள், நிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்கள். இதனால் நாங்கள் மேலும் பதற்றம் அடைந்தோம்.

டிவியில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்புகொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்புகொண்டு பெயர், விவரங்களை மட்டும் கேட்டனர். அதன் பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விவரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்” என தெரிவித்துள்ளனர்.