இரண்டு திருமணத்தை மறைத்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை கல்யாண ராணி, ரூ.20லட்சம், 20 பவுன் பறிக்க முயன்ற போது சிக்கினார். கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30).
கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ரேணுகாவுக்கு, ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேசுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரேணுகா, நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். இதனால் ரேணுகா கோவைக்கு தப்பி செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு கரூர் பஸ் நிலையம் வந்தார்.
தகவல் அறிந்த மகளிர் போலீசார், பேருந்து நிலையத்தில் ரேணுகாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 3 திருமணம் செய்து கொண்ட ரேணுகாவிற்கு, முதல் கணவர் மெய்யர் மூலம் ஒரு மகன், மகள் இருப்பதும், அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ரமேஷின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த புரோக்கர்களான ஜெகநாதன், ரோஷினி மற்றும் பழனிக்குமார் ஆகியோரை தேடி வருகிறோம். இந்த 3 பேரை தவிர்த்து வேறு யாருடனும் ரேணுகாவுக்கு திருமணம் நடந்ததா,
வரண் தேடும் இளைஞர்களை குறி வைப்பதோடு அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களிடமிருந்து பணம், நகைகள் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.