மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று காலை சேதுபதி கூரிய ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற சேதுபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது சேதுபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனையா? அல்லது கணவன்-மனைவி இடையே நடந்த பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.