2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி… பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

222

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவா் தெருவில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவரது மகன் 11 வயது தென்றல். இதே பகுதியில் வசித்து வருபவர் 13 வயது சௌந்திரபாண்டி.

இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 6 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனா். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டு விளையாட சென்றனர்.

வடுகபட்டியிலிருந்து மேலகாமக்காபட்டி ரோட்டில் கட்டையன் ஊருணியில் இருவரும் குளித்த போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். இதனிடையே மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா்கள் வீடு திரும்பாததால் அவா்களது பெற்றோா் பல இடங்களில் தேடினா்.

இந்த நிலையில், இரவில் அந்த வழியாக சென்றவர் ஊரணி கரையில் மாணவர்கள் ஆடையும், மாணவர் ஒருவர் தண்ணீரில் மிதப்பதையும் பார்த்தார். இதையடுத்து பெரியகுளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலியான இரு மாணவர்கள் உடலையும் மீட்டனர்.

பின்னா், சிறுவா்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.