மராட்டிய மாநிலம் புனேவில் பீபிஒ பெண் ஊழியரை பணப்பிரச்சினையில் சக ஊழியர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இளம்பெண்கள் பலர் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் ஒன்று மராட்டியத்தின் புனேவில் நடைபெற்றுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவின் ஏர்வாடா பகுதியில் தனியார் பீபிஓ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சுபாதா சங்கர் கோடரே என்ற 28 வயது இளம் பெண் வேலை செய்தார்.
அவருடன் கிருஷ்ணா கனோஜா (30) என்பவரும் வேலை செய்தார். இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் ஒன்றாக வெளியே செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளனா்.
கடந்த சில நாட்களாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் சுபாதா சங்கர் கோடரே, வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது நிறுவனத்தின் அருகில் உள்ள வாகன நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அவருடன் கிருஷ்ண கனோஜாவும் சென்றார். இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
அப்போது திடீரென கிருஷ்ண கனோஜா, தன்னிடம் இருந்த கத்திபோன்ற ஆயுதத்தை எடுத்து சுபாதா சங்கர் கோடரேவை சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் சுபாதா சங்கர் கோடரே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மேலும் உயிருக்கு போராடி உள்ளார். அப்போது கிருஷ்ணா கனோஜா, அங்கிருந்து தப்பி சென்றார்.
இதற்கிடையே தாக்குதலை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனா். உடனே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனா். அவர்கள் கத்திக்குத்து காயம் அடைந்த பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
எனினும் கத்தி குத்தால் படுகாயம் அடைந்த சுபாதா சங்கர் கோடரே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் பணப்பிரச்சினை காரணமாக சுபாதா சங்கர் கோடரேவை, கிருஷ்ணா கனோஜா கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து கிருஷ்ணா கனோஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.