3 வயது மகளைக் கொன்று, உடலுடன் 4 கி.மீ. சுற்றித்திரிந்த இளம்பெண்!!

151

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் சண்டையிட்ட நிலையில், தனது மூன்று வயது மகளைக் கொன்றுவிட்டு, மகளின் சடலத்துடன் 4 கிலோமீட்டர் தெருக்களில் சுற்றித் திரிந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்ணைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எம்ஐடிசி காவல் நிலைய எல்லையில் கடந்த திங்கட்கிழமை மாலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ட்விங்கிள் ரவுத் (23) எனும் இளம்பெண், தனது கணவர் ராம லக்ஷ்மன் ரவுத் (24) ஆகியோர் வேலை தேடி நாக்பூருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர்.

அதன் பின்னர் இருவரும் காகித தயாரிப்பு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தனர். நாக்பூரில் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ஹிங்னா சாலையில், தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது. மனைவி மீது கணவன் தொடர்ந்து சந்தேகப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் தம்பதியினர் மீண்டும் சண்டையிட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தன் கண்முன்பாக திடீரென சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்த இவர்களது மகள் அழ ஆரம்பித்தாள்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். அதன் பின்னர் தனது மகளை மரத்தடியில் தூக்கி எறிந்து கொன்றதாக போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.


மகளைக் கொன்ற பின்னர், கிட்டத்தட்ட 4 கிமீ தூரம் மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு இளம்பெண் நடந்திருக்கிறார். அதன் பின்னர் இரவு 8 மணியளவில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனத்தைக் கண்டு, பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக போலீசார் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் குழந்தை பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து எம்ஐடிசி போலீசார் குழந்தையைக் கொடூரமாக கொன்ற ட்விங்கிளைக் கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் ட்விங்கிள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மே 24 வரை அவரை போலீஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.