300வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் : திருடனை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

150

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்த பூமிக்கு அடியில் ஃபைபர் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன.

கம்பிகளுக்கு இணைப்பு வழங்க பல்வேறு இடங்களில் மின் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களாக பல இடங்களில் ஃபைபர் ஒயர்கள், மின்சாதனங்கள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் சாமர்த்தியம் காட்டிய திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில், வாழ்த்துகிறோம்… இண்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் ஆருயிர் திருடன்.

CCTVக்கு கூட தண்ணீர் காட்டும் நம் திருடன் குல திலகம்!. அண்ணன் ஸ்டைல் ​​ஸ்பிளெண்டர் பாண்டியின் 300வது திருட்டு விழாவிற்கும், 1000வது திருட்டு விழாவை கொண்டாடுவதற்கும் மனதார வாழ்த்துகிறோம்’ என பதிவிடப்பட்டது.


இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், பிஎஸ்என்எல் இளநிலை அதிகாரி சங்கர சுப்ரமணியன் நேற்று ஆலங்குடி போலீசில் புகார் அளித்தார்.

தொடர்ந்து விசாரணையில் கல்லாலங்குடியை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர் ஜெயசீலன் (36) என்பவர் கேபிள் வயர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் திருடன் வேடத்தில் நடித்தார். ஒரு காட்சியில் வடிவேல் ஒரு வீட்டிற்கு திருடச் செல்வார்.

அப்போது, ​​அவனது 100வது திருட்டில் அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்று அவனது கூட்டாளிகள் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டுவர். இந்த போஸ்டர் போலீஸ் வேனில் ஒட்டப்பட்டிருக்கும்.

திருடுவதற்காக வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே செல்லும் போது, ​​அங்கு காத்திருந்த போலீஸார் வடிவேலுவைக் கைது செய்வார்கள். இந்தத் திருட்டுக் காட்சியைப் பார்ப்பவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள். புதுகை அருகே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.