4 பேர் வெட்டிக் கொலை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

198

கர்நாடகாவில் பேரூராட்சி துணைத்தலைவர் மகன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் தசரா ஓனியைச் சேர்ந்தவர் சுனந்தா பகாலே. இவர் நகரசபை துணைத் தலைவராக உள்ளார். இவரது கணவர் பிரகாஷ் பகாலே(27).

இவர் வீட்டில் கார்த்திக் பகாலேவின் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக கொப்பலைச் சேர்ந்த பரசுராமன்(55), அவரது மனைவி லட்சுமி(45), மகள் அகன்ஷா(16) ஆகியோர் ஊருக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் முதல் மாடி அறையில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த முதல் மாடி அறையில் இருந்து நேற்று நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் பகாலே குடும்பத்தினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து பார்த்த போது கார்த்திக் பகாலே, பரசுராமன், அவரது மனைவி லட்சுமி, மகள் அகன்ஷா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.


இதுகுறித்து பிரகாஷ் பகாலே கூறுகையில்,” வீட்டின் முதல் மாடியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதால், நாங்கள் பயந்து போய் கதவை அடைத்துக் கொண்டோம்.

திறந்தால் எங்களையும் கொன்று விடுவார்கள் என்பதால் பயந்து போய் கதவைத் திறக்கவில்லை. நாங்கள் போலீஸாரை அழைத்த போது மர்ம நபர்கள் தப்பியோடிய சத்தம் கேட்டது” என்று கூறினார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கொள்ளைக்காக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

தப்பியோடிய கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி- நேமகவுடா, கூடுதல் எஸ்.பி- சங்கடா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஒரே நேரத்தில் 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடக் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூப்ளியில் தொழிலதிபர் மகள் நேஹா கொலை வழக்கில் இன்னும் புதிர் விலகாத நிலையில், கடக் மாவட்டத்தில் 4 பேர் படுகொலை நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.