4 வயதுச் சிறுமியின் கழுத்தை கடித்து இழுத்து சென்ற சிறுத்தை : கதறிய பெற்றோர்!!

60

கோவை மாவட்டத்தில் வால்பாறையை அடுத்து அமைந்துள்ளது ஊசிமலை மட்டம் எஸ்டேட். இந்தப் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அய்னுல் அன்சாரி மற்றும் நசீரான் இவர்களின் மகள் 4 வயது அப்சார்.

ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. நசீரான் அவரது மகளுடன் அப்பகுதியில் சிற்றோடை பகுதியில் உள்ள கீரை பறிக்க சென்று உள்ளனர்.

அதே நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை தேயிலை தோட்ட பகுதியில் வலம் வந்துள்ளது. சற்று தொலைவில் இருந்த அப்சாரை சிறுத்தை கழுத்தில் கடித்து தூக்கி செல்வதை கண்ட தாய் கதறி கூச்சலிட்டார்.

விபரீதம் நடந்ததை அறிந்து துக்கவீட்டில் இருந்த தொழிலாளர்கள் சம்பவத்தை அறிந்து தேயிலைத்தோட்டத்திற்குள் சிறுமியை மீட்க 50க்கும் மேற்பட்டோர் சால்கள் தோறும் கூச்சலிட்டு தேடி சென்றனர்.

மக்கள் வருவதை அறிந்த சிறுத்தை சிற்றோடை புதருக்குள் சிறுமியின் உடலை விட்டுவிட்டு ஓடிவிட்டது. தேடிச்சென்ற எஸ்டேட் மக்கள் சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் புதரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.


இச்சம்பவம் குறித்து உடனடியாக எஸ்டேட் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் விரைந்து வந்த வால்பாறை வனத்துறை, போலீசார், வருவாய் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமி உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தால் எஸ்டேட் பகுதியில் பீதி நிலவி வருகிறது.