கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். அவர் திருமணமாகாதவர் மற்றும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.
மேட்ரிமோனி மூலம், ஒரு இளம் பெண் அறிமுகமானார். காலப்போக்கில் இருவரும் நெருங்கி பழகியதால், அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண் கூறியுள்ளார்.
மேலும், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், தனது சகோதரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி அந்த பெண் பல்வேறு தவணைகளில் அந்த நபரிடம் இருந்து ரூ. 7,12,000 பெற்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் திடீரென அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் அந்த நபரை ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும், பிரியாவின் முதல் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது கணவரை பிரிந்துள்ளார். அதோடு நிற்காமல் ப்ரியா தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது திருமணம் செய்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு வாலிபரிடம், திருமணம் செய்வதாக கூறி, 4 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.
இதையடுத்து பிரியா வேறு யாரையாவது ஏமாற்றி விட்டாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.