4 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற பெரியம்மா : அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

130

கேரளா..

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். அவரது மனைவி ஆதிரா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ரித்விக் என்ற ஒரு மகன் இருந்தான். மதுசூதனனின் அண்ணன் மனைவி தீப்தி தாஸ் (29). மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு 5 வயதில் ஒரு மகள் உண்டு.

இந்தநிலையில் மதுசூதனனின் தாய் பத்மாவதி காய்ச்சல் காரணமாக கொழிஞ்சாம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று தங்களது மகன் ரித்விக்கை தீப்தி தாசிடம் விட்டுவிட்டு மதுசூதனனும், ஆதிராவும் மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது, வீட்டில் மகன் ரித்விக் தரையில் கிடந்துள்ளான். அதேவேளையில் தீப்தி தாஸ் கை, கழுத்தில் ரத்தக் காயங்களுடன் தரையில் கிடந்தார். அதை பார்த்ததும் கணவன்-மனைவி 2 பேரும் அதிர்ச்சியடைந்தனர்.


உடனே மதுசூதனன் கொழிஞ்சாம்பாறை போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து ரித்விக்கின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் தீப்தி தாஸ் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட தீப்தி தாஸ், ரித்விக்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பிறகு இரும்பு ஆயுதத்தால் தன்னுடைய கை நரம்பு மற்றும் கழுத்தில் குத்தியது தெரியவந்தது.

இந்த சமயத்தில் அவரது 5 வயது மகளும் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 வயது சிறுவன் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பாலக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.