40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் இரண்டாவது மகளும், சுரேஷ் குமாருடன் முதல் மகள் ஆர்த்தியும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் மகள் ஆர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடைய நேற்று சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் சுரேஷ்குமார் இயற்கைக்கு மாறாக கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மகள் ஆர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மகள் ஆர்த்திக்கும் (21) தூரத்து உறவினரும், திருமணமாகி மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் 40 வயது கொண்ட சுரேஷ் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனை அறிந்த தந்தை மகளை கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று சுரேஷ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து மட்டையாக்கி மகள் ஆர்த்தியும் கள்ளக்காதலன் சுரேஷ்பாபுவும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அதன்பின் காலையில் தந்தை உயிரிழந்து விட்டதாக அருகில் உள்ளவர்களிடம் மகள் ஆர்த்தி கூறிய நிலையில் மது போதையில் தந்தை உயிரிழந்ததாக நாடகம் ஆடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மகள் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபு இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.