இந்தியா….
இந்தியாவில் சிறுத்தை வாய்க்குள் சிக்கிய தனது 5 வயது மகளை துணிச்சலுடன் மீட்டுள்ளார் அவரின் தாயார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள ஜூனோனா கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு வசித்து வருபவர் தான் அர்ச்சனா.
இவர் தனது மகள் பிரஜக்தா (5)வை அழைத்து கொண்டு இயற்கை உபாதைகள் கழிக்க சென்றுள்ளார்.
செடிகள் நிறைந்த பகுதிக்குள் அர்ச்சனா சென்ற போது திடீரென பிரஜக்தாவின் சத்தம் கேட்டது. வெளியில் வந்து அர்ச்சனா பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஒரு சிறுத்தை பிரஜக்தாவின் தலையை தன் வாயால் கவ்வியிருந்தது.
இதையடுத்து தனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அருகிலிருந்த மரக்கட்டையால் சிறுத்தையை அடித்து, அதனுடன் சண்டையிட்டு மகளை மீட்கப் போராடியுள்ளார்.
பின்னர் சிறுமியை விட்ட சிறுத்தை அர்ச்சனாவையும் தாக்க முற்பட்டுள்ளது. அதையும் தடுத்து, தனது மகளைப் போராடி மீட்டுள்ளார் அர்ச்சனா. இந்த நிலையில் சிறுத்தை வாயில் சிக்கிய சிறுமி பிரஜக்தாவின் மேல் மற்றும் கீழ் தாடை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை நாளை சிறுமிக்கு நடைபெறவுள்ளது.
மருத்துவர் டடர்கர் கூறுகையில், என்னுடைய 21 வருட மருத்துவ அனுபவித்தில் சிறுத்தை வாய்க்குள் சிக்கி உயிர் பிழைத்தவர்களை கண்டது இல்லை, இது அதிர்ஷ்டம் தான் என கூறினார்.
அர்ச்சனா கூறுகையில், என் மகளை காப்பாற்ற முயன்றால் சிறுத்தை என்னை தாக்கும் என பயந்தேன். ஆனால் என் மகள் இறப்பதை நான் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும், அதனால் தான் துணிச்சலுடன் செயல்பட்டேன் என கூறியுள்ளார்.