8 வயது சிறுமிக்கு வீட்டில் ஏற்பட்ட பயங்கரம்! உடலின் எல்லா இடத்திலும் காயம்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

881

பாகிஸ்தானில் விலை உயர்ந்த பறவையை கூண்டில் இருந்து திறந்துவிட்டதால் 8 வயது சிறுமியை வீட்டு உரிமையாளர் கொடூரமாக சித்ரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் பகுதியில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி ஷோஹ்ரா. வீட்டு வறுமை காரணமாக இவரது தந்தை 4 மாதங்களுக்கு முன்பு ராவல்பிண்டி பகுதியில் வசித்துவரும் ஹாசன் சித்திக் மற்றும் உம்மீ குல்சன் தம்பதியின் வீட்டிற்கு வேலைக்காக மகளை அனுப்பி வைத்தார். பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் அந்த சிறுமியும் அங்கே எடுபிடி வேலைகளை செய்து வந்தார். வேலைக்கு சேர்ந்தது முதலே 8 வயது சிறுமி என பாராமல் அதிக சுமையுள்ள வேலையை வீட்டு உரிமையாளர் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி சோஹ்ரா விபத்தில் சிக்கியதாகக் கூறி ராவல்பிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீட்டு உரிமையாளர் தலைமறைவானார்.

ஆனால் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் சித்ரவதை செய்ததற்கான அடையாளங்கள் நிறைய இருந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். இதை அறிந்து பெற்றோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.


மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசாருக்கு மரண வாக்குமூலம் தந்த சிறுமி சோஹ்ரா, விலையுயர்ந்த பறவையை கூண்டிலிருந்து வெளியேற்றியதால் ஆத்திரத்தில் தன்னை ஹாசன் மற்றும் அவரது மனைவி அடித்து சூடு வைத்து கடுமையாக தாக்கியதாக கூறினார். இதனால் சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து தலைமறைவான தம்பதியை தேடிப் பிடித்த போலீசார் ஹாசன் சித்திக் மற்றும் அவரது மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களும் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஆனாலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி சோப்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தம்பதியினருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.