99 ரூபாய் ஆஃபரால் வந்த வினை.. திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவர், சகோதரியுடன் தீயில் கருகிய துயரம்!!

104

குஜராத்தில் நடந்த தீவிபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோரை அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் தனது திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவருடன் தீயில் கருகி இறந்து போன சம்பவமும் தற்போது வெளிவந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டு நாள்களுக்கு முன்பு விளையாட்டு மையத்தில் மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

இதனால் ஒவ்வொரு உடலையும் டி.என்.ஏ.பரிசோதனை நடத்தி அடையாளம் காணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தீவிபத்து ஏற்பட்ட டி.ஆர்.பி.கேம் சோன் பங்குதாரர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் யுவராஜ் சிங் என்பவர் உட்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எஞ்சியவர்களை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 15 பேர் ஆண்கள் ஆவர். 6 பேர் பெண்கள் ஆவர். 3 குழந்தைகளும் அடக்கம். இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் அக்‌ஷய் மற்றும் அவரது மனைவி கியாதி மற்றும் மைத்துனி ஹரிதா ஆகியோருடம் அடங்கும்.

அக்‌ஷயிக்கும் கியாதிக்கும் கடந்த வாரம் சனிக்கிழமைதான் நீதிமன்ற உத்தரவு மூலம் திருமணம் நடந்தது. அக்‌ஷய் கனடாவை சேர்ந்தவர் ஆவார். கோர்ட் மூலம் திருமணம் செய்து கொண்டாலும் இந்த ஆண்டு இறுதியில் பெரிய அளவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

அவர்கள் தங்களது திருமணத்தை கொண்டாட விளையாட்டு மையத்திற்கு சென்ற போது இந்த தீவிபத்து நடந்திருக்கிறது. இதில் அக்‌ஷய் உடல் அவர் அணிந்திருந்த மோதிரம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரது உடலும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.


அனைவரின் டி.என்.ஏ.பரிசோதனையும் முடிய ஒரு வாரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தீவிபத்தில் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை செய்ய ஒரு வாரம் வரை உறவினர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விடுமுறை நாள் தினத்தில் விளையாட்டு மைய நிர்வாகம் திடீரென ஆஃபர் அறித்திருந்தது. அதாவது கட்டணத்தை ரூ.99 ஆக குறைத்து உத்தரவிட்டது. இதனால் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்தது. அதோடு வெளியில் வர குறுகலான ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது.

நுழைவு வாயிலில் தற்காலிக கட்டுமானம் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. தீவிபத்தால் அதுவும் விழுந்துவிட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அருகில் வெல்டிங் நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீக்கனல் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.