11 வயசுல சொந்த தொழில்.. மாசம் 1 கோடி வருமானம்.. ஓய்வுபெற இருப்பதாக அறிவித்த சிறுமி : அசுர வளர்ச்சியின் பின்னணி!!

3935

ஆஸ்திரேலியா..

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.

பொதுவாக 11 வயது குழந்தைகள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்க வேண்டும் என தங்களது பெற்றோரிடம் கேட்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்சி கர்டிஸ் (Pixie Curtis) எனும் சிறுமி சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

அதுவும் பொம்மைகளை உருவாக்கி அதனை திறம்பட விற்பனையும் செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் உலகமே ஸ்தம்பித்து இருந்த நிலையில் தனது வீட்டில் முடங்கியிருந்த பிக்சிக்கு சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என தோன்றியிருக்கிறது.


பொம்மைகள் செய்வதில் பிக்சி கில்லாடி. ஆகவே, அதையே தனது தொழிலாக எடுத்துக்கொண்டார் அவர். பிக்சியின் தாய் ராக்சி ஜேசன்கோ (Roxy Jacenko) பிரபல மக்கள் தொடர்பு ஆலோசகர் வேறு.

இதன்மூலம், தனது பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? வியாபாரத்தை எவ்வாறு லாபகரமானதாக மாற்றுவது? என ஆலோசனை வழங்கியுள்ளார் ராக்சி. அதன் பலனாக பிக்சியின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

எந்த அளவுக்கு என்றால் மாதம் 1.1 கோடி ரூபாய் (110,000 யூரோ) அளவுக்கு பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் பிக்சி. கூடவே சிறுவர்களுக்கான பிற மேக்கப் பொருட்களும் விற்பனையாகின்றன. சமீபத்தில் தன்னுடைய 11 வது பிறந்தநாளை பிக்சி கொண்டாடினார்.

அதற்கு அவர் செலவிட்ட தொகை மட்டும் சுமார் 23 லட்சம் என சொல்லப்படுகிறது. சிறுவயதிலேயே வியாபாரத்தில் உச்சம் தொட்ட பிக்சி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் தனக்கென ஒரு சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது தொழிலில் இருந்து சற்றே விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தனது கல்வியில் கவனத்தை திருப்ப உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

இதுபற்றி அவரது தாய் ராக்சி பேசுகையில்,”பிக்சி தனது உயர்நிலை கல்வியை பெற இருப்பதால் தொழிலில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே இதைப்பற்றி நாங்கள் விவாதித்து வந்தோம். அவள் பள்ளி படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டிய நேரம் இது. இருப்பினும் அவளுடைய தொழில் தொடர்ந்து நடைபெறும். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அதிலும் ஈடுபடுவார்” என தெரிவித்திருக்கிறார்.