லண்டனில்….
லண்டனில் இந்திய இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவருடன் தங்கியிருந்த இலங்கையரான அகிலா ஜனகம, அந்த கடைசி நிமிடங்களை பயத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
குறித்த குடியிருப்புக்கு இனி தம்மால் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள அகிலா ஜனகம, தனது வாழ்க்கையில் ஒரு ஐந்து நிமிடம் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மிகக் கொடூரமான சம்பவம் ஒன்றும் நடந்தது என தேஜஸ்வினி கொல்லப்பட்ட நாளை குறிப்பிட்டு கண்கலங்கியுள்ளார்.
தேஜஸ்வினியின் நெருங்கிய தோழியான 28 வயது அகிலா ஜனகம, மார்பில் 4 முறையும் காலில் ஒரு முறையும் கத்தியால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
அந்த பிரேசில் இளைஞரிடம் இருந்து தம்மை காத்துக்கொள்ள கதவருகே நின்று போராடியதாகவும், அதே வேளை பொலிசாருக்கும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த 10 நிமிடங்கள் எனது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது என கூறும் அகிலா, அந்த நிமிடங்கள் மயான அமைதி நிலவியது எனறும், தம்மால் தேஜாவின் கடைசி மூச்சு பிரிவதை கேட்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
சமையலறையில், ரத்தவெள்ளத்தில் கிடந்த அவளை தாம் பார்த்ததாகவும், ஆனால் அவள் முகம் தன்னால் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பகல் Harry Styles இசை நிகழ்ச்சிக்கு செல்ல தாம் தயாராகிக் கொண்டு இருந்ததாக கூறும் அகிலா,
தேஜஸ்வினி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் என்றும், எந்த தலைப்பிலும் சரளமாக பேசக்கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார். கிரீன்விச் பல்கலைக்கழக மாணவியான தேஜஸ்வினியுடன் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அகிலா ஒன்றாக தங்கி வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளும் முடிவுடன் செப்டம்பரில் தேஜஸ்வினி இந்தியா செல்ல இருந்ததையும் அகிலா குறிப்பிட்டுள்ளார். தற்போது தேஜஸ்வினியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பவும், அவரது குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர்.
அத்துடன், அகிலாவும் தமது மருத்துவ செலவு உட்பட தமது நிதி நெருக்கடியை சமாளிக்க, 10,000 பவுண்டுகள் தொகையை பொதுமக்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளார்.
வாழ்க்கையில் இதுவரை மிக மோசமான தருணங்களை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அகிலா, தமது அன்றாட பணிகளை முடிப்பதில் சிரமம் உள்ளது எனவும், மேலும் இந்த இக்கட்டான சூழலில் இனி நான் எப்போது பணிக்கு திரும்ப முடியும் என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேஜஸ்வினி கொலை வழக்கு மற்றும் அகிலா மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 23 வயது Keven Antonio Lourenco De Morais என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.