கனடாவில்..
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் வாழ்ந்துவந்த பள்ளி ஆசிரியரான முக்தியார் சிங் பங்காலி (Mukhtiar Singh Panghali)யின் மனைவியான மன்ஜீத் பங்காலி, 2006ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி காணாமல்போனார்.
அப்போது அவர் நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, மன்ஜீத்தில் உடல், மோசமாக எரிந்த நிலையில் கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
தன் மனைவியைக் காணவில்லை என நாடகமாடிய பங்காலி, 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு, 15 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத வகையில் பங்காலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது பங்காலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதால் சமுதாயத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,
அவர் மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ அது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், பங்காலிக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
எக்காரணம் கொண்டும் அவர் தன் மனைவி குடும்பத்தினரை, தன் சொந்த மகள் உட்பட, சந்திக்கக் கூடாது என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று வயது இருக்கும்போது, அந்தப் பிஞ்சுக் குழந்தை தன் தாயை பறிகொடுத்து,
தந்தையும் சிறைக்குப் போனதால், வாழ்நாள் முழுவதும் வேதனையில் வாழும் நிலைமைக்கு ஆளானாள்.தற்போது, அவள் தன் தாயின் சகோதரியான ஜாஸ்மின் வீட்டில் வளர்கிறாள்.
ஜாஸ்மினையும் அவரது கணவரான தர்மிந்தரையும் அம்மா, அப்பா என அழைத்து வாழும் அந்தப் பிள்ளை, இப்போதும் அன்னையர் தினம், பிறந்தநாள் ஆகிய நாட்களின்போது வேதனையுடன்தான் வாழ்வதாக, ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.