நடு வீதியில் துடிதுடித்து பலியான இரண்டு இளைஞர்கள்.. நஞ்சை உலுக்கும் சம்பவம்!!

394

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சபரிநாதன் (26), விக்கி (25), விஜயதாஸ் (26). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை புல்லட்டில் புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காட்ராம்பாக்கம் கிராமத்தின் அருகே உள்ள எடை மேடை ஒன்றில் சவுக்கு கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நின்றிருந்தது. எடைபோட்ட பின்னர் அந்த லாரி திண்டிவனம் நோக்கி செல்லும் சாலையை கடக்க முயன்றது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சபரிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும், திடீரென சாலையை கடந்த லாரியின் மீது மோதினர். இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவர்களை பரிசோதனை மருத்துவர்கள், சபரிநாதன் மற்றும் விக்கி ஆகிய இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விஜயதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விசாரணையில், சபரிநாதன் மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் சிறு கம்பெனி வைத்து தொழில் செய்து வருவதும், விக்கி வானூர் தாலுகா நெசல் கிராமத்தில் இண்டர்நெட் சென்டர் வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த பகுதியில் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் இந்த பகுதியில் சாலை விளக்கு இல்லாததாலேயே தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், உடனடியாக அப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீஸார். அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் தைலாபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.