கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் ராதிகாவை காதலித்து வந்தார்.
இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்வில் சேர முடியாது என காதலர்கள் முடிவெடுத்தனர். சாவிலாவது ஒன்று சேரலாம் என நினைத்து காதலர்கள் இருவரும் சௌகி தாண்டாவிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அவர்கள் இருவரும் அங்கு சென்று கையோடு கொண்டு சென்றிருந்த விஷத்தை குடித்தனர். இதன் பின் தான் ஆகாஷ்க்கு உயிர் பயம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக தனது அம்மாவுக்கு போன் செய்து, காதலியோடு விஷம் குடித்து விட்டதைக் கூறினார். இதனை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தார்.
அதற்குள் அந்தப்பக்கமாக வந்த சுற்றுலாப் பயணிகள் இவர்கள் இருவரும் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதற்குள் இருவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலபுர்கி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.