கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயியான இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, தங்கள் விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக சென்றிருக்கின்றனர்.
ஆனால் அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அதனால் அவர்களின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவர்களை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் கடந்த மூன்று நாள்களாக அவர்களை தேடி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை அதே பகுதியிலுள்ள விவசாய நிலத்தில், மூன்று பேரும் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் மர்ம மரணம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி மனோஜ்குமார் தலைமையிலான போலீஸார், அவர்களின் சடலங்களைக் கைப்பற்றி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் அப்பகுதி மக்களிடமும், ராதாகிருஷ்ணனின் உறவினர்களிடமும் விசாரணையை துவக்கியிருக்கின்றனர் போலீஸார். பன்றிகளுக்காக சட்ட விரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலி தாக்கி உயிரிழந்தார்களா அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் கொலைசெய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை துவக்கியிருக்கின்றனர்.