மும்பையில்..
மும்பை அருகில் உள்ள நவிமும்பை உல்வே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சிங்(45). பில்டரான இவருக்கு ஷிவுட் என்ற இடத்தில் அலுவலகம் இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு பில்டர் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இரவில் பணி நிமித்தமாக அலுவலகம் சென்று இருந்தவர் காலையில் துப்பாக்கியால் சுட்டுக்கிடந்தார். இது குறித்து பில்டர் மனைவி பூனம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பில்டரின் அலுவலகம் மற்றும் அவரது கேபின் டிஜிட்டல் லாக்கர் வசதியுடையது ஆகும். அதனை பில்டர் அல்லது அங்கு வேலை செய்பவர்களை தவிர வேறு யாராலும் திறக்க முடியாது.
எனவே டிரைவர் சம்சுதின் கான் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்யும் சத்யம் சிங் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் கொலை நடந்த தினத்திற்கு முந்தைய நாள் இரவு சம்சுதின் கான் பில்டர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பில்டர் மனைவி பூனம், சம்சுதினுக்காக நள்ளிரவில் சமையல் செய்துள்ளார். இதனை வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபரிடம் விசாரித்த போது சம்சுதின் முந்தைய நாள் இரவு வந்ததையும் அவருக்கு பூனம் சாப்பாடு சமைத்து கொடுத்ததையும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பூனத்திடம் விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். காதலன் துணையோடு கணவனை கொலை செய்துவிட்டு சொத்துக்களை அபகரிக்க இரண்டு பேரும் திட்டம் தீட்டி இருந்தனர்.
இதற்காக சம்சுதின் பில்டரிடம் இரவில் தங்கம் விற்பனை செய்யும் ஒருவர் அலுவலகத்திற்கு வருவதாக கூறி அனுப்பி இருக்கிறார். அலுவலகத்திற்கு சென்றவுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு வந்த காதலனுக்கு சாப்பாடு சமையல் செய்து பூனம் பறிமாரி இருக்கிறார்.
இதனை பூனம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சம்சுதின் முதலில் கைது செய்யப்பட்டார். பில்டரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு பூனம் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சம்சுதின் கடந்த 6 ஆண்டுகளாக பில்டருடன் இருந்துள்ளார். டிரைவராகவும், பியூனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் 4 மாதம் பில்டர் வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்றார்.
அந்த நேரத்தில் சம்சுதின் அடிக்கடி பில்டர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த நேரத்தில் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி பன்சாரே கூறுகையில்,” பில்டரிடம் அவரது தொழில் பார்ட்னர் குமார் தங்கம் விற்பனை செய்ய வருவதாக கூறி பில்டரை சம்சுதின் இரவு அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறார். பில்டர் மனைவியிடமும் எப்படி போலீஸாரிடம் பொய் சொல்லவேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார்” என்றார்