பட்டப்பகலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் உள்ளிட்ட மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் அமராவதி. ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தத்திற்கு அமராவதி சென்றபோது, அங்கே திடீரென வந்த அவரது கணவர் குணாவும், அவரது நண்பர்களும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் முற்றி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த குணா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.
இதில் அமராவதி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். உடனே, குணா உட்பட மூவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், அமராவதியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய குணா உட்பட மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.