மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை வெளிநாட்டு கணவன் கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. சாதாரண குடும்ப சண்டைகளும் கொலைகளில் முடிந்து விடுவதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.
காலையில் டிபன் செய்யாத மனைவி குத்திக் கொலை, சமைக்க தாமதமானதால் தாய் அடித்துக் கொலை, பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிய மனைவியை கொலை செய்த கணவன் போன்ற செய்திகளை பாரக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
குடும்ப உறவில் குறைந்து வரும் அன்யோன்யம், தம்பதியர் மத்தியில் வரும் தேவையில்லாத சந்தேகம் போன்றவையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் தேனியில் நடந்திருக்கிறது. தேனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (35). இவருக்கும், பிரியங்கா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த உடனேயே வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருக்கிறார் மகாராஜன். வருடத்துக்கு இரு முறை மட்டுமே வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். ஆனால், பகலிலும், இரவிலும் மனைவியிடம் நீண்டநேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மகாராஜன். இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக மகாராஜன் பேசும் போதெல்லாம், பிரியங்காவின் செல்போன் பிசி பிசி என்று வந்துள்ளது.
இதுகுறித்து பிரியங்காவிடம் கேட்ட போது, தனது தோழியிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மகாராஜனுக்கு மனைவி பிரியங்கா மீது சந்தேகம் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த மகாராஜன், பிரியங்காவை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சண்டை முற்றவே, கோபமடைந்த மகாராஜன், பிரியங்காவை சரமாரியாக தாக்கினார். மேலும், அவரது கழுத்தையும் நெரித்துள்ளார்.
இதில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார் மகாராஜன். சந்தேக புத்தியால் ஒரு குடும்பமே சிதைந்து போன சம்பவம் தேனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.