சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்… மகளின் கணவருக்கு போட்ட ஸ்கெட்ச் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!

201

ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு – எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவரும், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சுவும் (22) காதலித்து வந்துள்ளனர். சுபாஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த மஞ்சுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுவை அழைத்துச் சென்று சுபாஷ் திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களுடைய திருமணத்தை மஞ்சுவின் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும், தனது தங்கை ஹரிணியை (15) பள்ளியில் விடுவதற்காக சுபாஷ் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு வேன் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து சுபாஷும், ஹரிணியும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு ஹரிணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்ட சுபாஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகளை திருமணம் செய்ததை விரும்பாத மஞ்சுவின் தந்தை சந்திரன், அவருடைய மனைவி சித்ரா ஆகியோர் சுபாஷை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டதாகவும், கொலை செய்யும் முயற்சியாக மினி வேனை ஓட்டிவந்த சந்திரன், சுபாஷின் பைக் மீது மோதியது தெரிய வந்தது.

இதையடுத்து, கொலை வழக்கு, எஸ்.சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி உள்ள சந்திரன், சித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.