கல்லூரி கேன்டீனில் மாணவி குத்திக்கொலை.. காதலிக்க மறுத்ததால் மாணவர் வெறிச்செயல்!!

155

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார்.

இதே கல்லூரியில் மாநகராட்சி உறுப்பினரான நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா எம்சிஏ படித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஃபயாசும், நேஹாவும் நண்பர்களாக பழகியுள்ளனர்.இந்த நிலையில் நேஹாவை ஃபயாஸ் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இது சம்பந்தமாக நேஹாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால், அவருடைய காதலை நேஹா ஏற்கவில்லை. அத்துடன் ஃபயாஸிடம் இருந்து விலக ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் மீது ஃபயாஸ்க்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி உணவகத்தில் இருந்த நேஹாவை ஃபயாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்த ஆரம்பித்தார்.

நேஹாவின் கழுத்தில் 9 முறை கத்தியால் ஃபயாஸ் குத்தினார். இதைப் பார்த்த மாணவ, மாணவியர் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நேஹா சரிந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேஹாவை குத்திக்கொலை செய்த ஃபயாஸை வித்யாநகர் போலீஸார் கைது செய்துள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.