கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார்.
இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார். அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கடன் அதிகரித்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மனமுடைந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விஜயகுமாரும், அவரது மனைவி சந்தியாவும் அறைக்கு சென்றனர்.
அதன் பின்னர் காலை நீண்ட நேரமாகியும் அறைகதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாய் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால், அவரது தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமாரும், சந்தியாவும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவரது அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கடன் பிரச்னையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் வாலிபர் கர்ப்பிணி மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.