தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷர்மிளாவை பிரவீன் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இதனால் பிரவீன் மீது ஷர்மிளா வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரவு பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
அப்போது பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தொடர் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14ம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை பிரவீன் குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷர்மிளா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.