2 குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாய்… மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

192

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30). இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு குழந்தைகள் வீட்டில் இருந்ததால், பவித்ரா தனது குழந்தைகளை தினமும் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பவித்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கினர்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.