பழிக்கு பழி… தலை, கைகள் துண்டித்து இளைஞர் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்!!

231

மீஞ்சூர் பகுதியில் பழிக்குப் பழியாக தலை, கைகள் துண்டித்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை துணியால் சுற்றப்பட்ட நிலையில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே துண்டிக்கப்பட்ட தலை சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஒரு சமாதியில் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இளைஞர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி,

எடுத்து வந்து மீஞ்சூர் காந்தி சாலையில் வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் (26) எனத் தெரியவந்தது.


கடந்தாண்டு செங்குன்றம் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் முன்விரோதம் காரணமாக பெருங்காவூரை சேர்ந்த அஜீத்குமார் என்பவர் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அஜீத்குமாரின் சமாதியின் மீது,

துண்டிக்கப்பட்ட அஸ்வின் குமாரின் தலையை வைத்து பழி தீர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கருப்பு அஜித் என்பவருடைய பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதற்கு அஸ்வின்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமாரின் நண்பர்கள் பழிக்கு பழியாக அஸ்வின்குமாரை கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.