விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கமல்ராஜ் உயிரிழந்தார். இவரது உற்ற நண்பரான ஞானவேல் என்பவர் கமல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரது குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
இந்நிலையில் நண்பர் கமல்ராஜ் உயிரிழந்த தகவலை அறிந்ததும் திடீரென ஞானவேலுக்கு வலிப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் இரு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இருவரது இறுதிச் சடங்குகளும் இன்று நடைபெற உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த இருநண்பர்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.