நாமக்கல் மாவட்டம், எண்.3 கொமராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பழனிவேல் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இறந்த பழனிவேலின் சகோதரி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் பழனிவேலின் மனைவி செல்வி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அப்போது அந்த பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். எனது கணவரும், ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமியும் நண்பர்கள். கந்தசாமி வீட்டுக்கு அடிக்கடி வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
என் கணவர் இல்லாத போது, நாங்கள் அடிக்கடி சுற்றி திரிந்தோம். இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தது மட்டுமின்றி, அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி தானும், கள்ளக்காதலன் கந்தசாமியும், சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவியும் சேர்ந்து மது கொடுத்து பழனிவேலை கத்தியால் குத்தி கொன்றதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் செல்வி, ரவியை கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கந்தசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.